வன்னி மரம்(KEJARI )
English Name | Tamil Name | Botanical Name |
KEJARI | வன்னி மரம் | PROSOPIS CINERARIA |
பொது விவரம்
ஆண்டுக்கு 500 மி.மீக்கு குறைவாக மழையுள்ள இடங்களில் நன்கு வளரும் தன்மை உடையது. சில இடங்களில் கரிசல் மண்ணிலும் காணப்படுகிறது. இது வறண்ட, பாலைப்பகுதி மரமாகும், இருப்பினும் பசுமை மாறாமலிருக்கும்.
வன்னி மரம் சுமாரான உயரமுடைய மரம் 0.9 மீட்டர் விட்டமுடைய அடிமரத்துடன் 6-9 மீட்டர் உயரம் வளரக்கூடியது. ஓரளவிற்குச் செங்குத்தாக வளர்ந்து, அதற்கு மேல் நிறைய கிளைகளை உருவாக்கிக் கொள்ளும். இலைகள் இரட்டைக் கூட்டிலை அமைப்புடையது. மழைக்காலத்திற்குப் பின், சிறு மஞ்சள் நிறப் பூங்கொத்துக்கள் உருவாகும். இவை சிறிது நறுமணமுடையவை.
ஏப்ரல்- ஜூன் மாதங்களில் காய்க்கும். இவை பின்னர், சிறிது உருளை வடிவ நெற்றுக்களாக மாறும்.
பயன்கள்
பாலைவனப் பகுதிக்கு உயிர் கொடுப்பது, வன்னி மரங்களே. பாலைப்பகுதி மக்களுக்கு வன்னியும் ஆடும், ஒட்டகமும் வாழ்வளிக்கின்றது. தழை உற்பத்தி செய்வதில், வன்னியின் திறன் அபாரமானது. மரத்தினடியில் பிற புற்பூண்டுகளுடன் போட்டியிடாமல், ஆழ்தள நீரைக் கொண்டே வளர்ந்திடும்.
இதரப் பயன்கள்
தேரி மணல் பகுதிகளில் வளர்க்க ஏற்ற மரமாகும். மணல் காற்றின் அரிப்பை தடுத்துவிடும்.
பயிர் முறை
தமிழகத்தில் எங்கும் வளர்க்கலாம். கிராமங்களில் தரிசு நிலங்களைப் பயனாக்கிட மிகவும் ஏற்றது. வன்னி மிகவும் நிதானமாக வளரும் மரமாகும்.
வன்னியைப் பயிரிட, நேரடியாக விதையை விதைக்கலாம், அல்லது விதையை நாற்றுவிட்டு, கன்றுகளை நடலாம். முற்றிய நெற்றுக்களைப் பறித்து, வெயிலில் நன்கு உலர்த்தி, விதையைப் பிரித்தெடுக்க வேண்டும். ஒரு கிராம் எடையில், 25-27 விதைகள் இருக்கும். நீண்ட காலம் விதையைச் சேமித்து வைக்கலாம். பல வருடங்கள் வரை, விதை உயிர்ப்புடன் இருக்கும்.
விதையின் முளைப்பைத் துரிதப்படுத்த பல வழிமுறைகள் உள்ளன. விதையை 24 மணி நேரம் நீரில் ஊறவைத்தல். சாண உருண்டைகளில் விதையைப் பொதிந்து உலர்த்தி, பின் விதைப்பதால் முளைப்பு துரிதப்படுவதுடன் கூட, நூற்றுக்களும் நன்கு வளரும் .
வன்னியைப் பற்றிய சில சரித்திர சம்பவங்கள்
கி.பி 1451ம் ஆண்டில் இராஜஸ்தான் பிப்சார் என்ற கிராமத்தில் ஒரு குழந்தை பிறந்தது. ஜாம்பாஜி என்ற இக்குழந்தை, இருபத்தைந்தாவது வயதை அடைந்த சமயம், அங்கு மழை பொய்த்தது. பஞ்சம் தலை தூக்கியது. முதல் வருடம், மாடுகளைக் காப்பாற்ற கம்பந்தட்டை கை கொடுத்தது. அடுத்த வருடமும் பஞ்சம் நீடித்தது. மரத் தழைகளை எல்லாம் வெட்டி தீவனமாகக் கொடுத்தனர். அப்படியும் பஞ்சம் முடியவில்லை. எட்டு ஆண்டுகள் பஞ்சம். மரங்கள் மறைந்தன.தானிய இருப்பும் கரைந்தது. முடிவில் மக்கள் வன்னி மர நெற்றுக்களையும் இலந்தைக் கொட்டைகளையும் மாவாக்கி உண்டனர் . அதன்பின் வேறு வழியின்றி, பசுமையைத் தேடி புறப்பட்டனர். வழியிலே மாடுகள் மாண்டன. மனிதர்களில் பலர் மடிந்தனர். எஞ்சியவர்களில் ஒருவன் ஜாம்பாஜி. பஞ்சத்தின் கோரம் ஜாம்பாஜியை உலுக்கிவிட்டது. பஞ்சத்தின் அடிப்படைக் காரணத்தை உணர்ந்தான். மனிதன்-மரம் -மிருகம் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. இந்த இணைப்புக் கோபுரத்தின் அடித்தளம் மரமே எனக் கண்டான். அவனுடைய 34 வது வயதில், இலந்தையும் வன்னியும் அடர்ந்த காட்டிலே, மனிதனும் மிருகங்களும் செழித்துக் கொழித்து உலாவி வரும் காட்சியைக் கண்டான். பாலைவனச் சூழ்நிலையில், மனித இனம் வாழ வேண்டுமானால், இயற்கையுடன், இணைந்து வாழவேண்டுமேயன்றிஇ, சுரண்டி வாழலாகாது எனத் தீர்மானித்தார். கி.பி1495ல், இருபத்துஒன்பது அறிவுரைகள் கொண்ட சித்தாந்தத்தை உருவாக்கினான். மக்களிடையே அவற்றைப் போதித்தான். அந்த 29 அறிவுரைகளிலே ஒன்று மரத்தை வெட்டாதே, மிருகங்களைக் கொல்லாதே என்பவையும் அடங்கும். இந்த சித்தாந்தத்தை ஏற்று நடப்பவர்கள் எல்லாம் பிஷ்ணாய்கள் (29 அம்சத்தினர்) என அழைக்கப்பட்டனர். அவர்கள் வாழ்விடங்களில், வன்னியும் இலந்தையும் வளர்க்கப்பட்டு காடுகள் உருவாகின. பஞ்சத்திற்கு விடிவும் தோன்றியது.
இரண்டாவது சம்பவம்
ஜாம்பாஜியின் காலத்தில் மார்வார் இராஜ்யத்தில் அஜித் சிங் என்பவர் ஆண்டு வந்தார். மொகலாய அரசர்களுடன் ஓயாமல் சண்டையிட்டு வாழ வேண்டிய சூழ்நிலையில் இருந்தார். அதற்காக கி.பி 1730 ல் மாபெரும் கோட்டை ஒன்றைக் கட்ட ஆரம்பித்தார் இதற்காக பெருமளவில் சுண்ணாம்பு தேவைப்பட்டது. சுண்ணாம்புக் கால்வாய்களுக்கு, அருகில் உள்ள வன்னி மரங்களையெல்லாம் வெட்டினான். கோட்டைக்கு, 16 மைல் தூரத்தில் நூற்றாண்டு காலமாக உருவாக்கிப் பேணி வந்த பிஷ்ணாய்களின் காடுகள் இருந்தன. இக்காடுகளிலிருந்து வன்னி மரங்களை வெட்டிக் கொண்டுவர, அஜித் சிங் ஆணையிட்டான். அப்பாவி பிஷ்ணாய்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. வாழ்க்கையின் அடித்தளத்தையே இந்த ஆணை தகர்ப்பதாகக் அரசரின் தளபதியிடம் முறையிட்டனர். அழுது புலம்பினர், பலனில்லை. மரத்தை வெட்ட ஒரு படையே வந்து விட்டது.
ராம்கோட் பிஷ்ணாய் என்பவரின் மனைவி அமிருததேவிக்கு ஆவேசம் வந்து விட்டது. தனது மூன்று மகள்களுடன் ஒரு வன்னி மரத்தை அணைத்துக் கொண்டு, ‘எங்களை முதலில் வெட்டிய பின் இந்த வன்னியை வெட்டு’ எனக் கதறினாள். படை செயலில் இறங்கியது. நான்கு தலைகளும் உருண்டன. பிறரிடம் இரத்தம் கொதித்தது. ஒருவர் பின் ஒருவராய் முன்வந்து, வன்னியை அணைத்தனர். ஒன்றன் பின் ஒன்றாய் தலைகளும் சிதறியது. அரசனுக்குச் செய்தி எட்டியது. அஜித் சிங்கின் மனமும் இளகியது.ஆனால் அதற்குள் அங்கு 363 பிஷ்ணாய்கள் பலியாயினர். இச்சோகக் காட்சியை கண்ட அரசன், வன்னிமரக் காடுகளுக்கு உயிர்பிச்சை அளித்தான். தாமிரப்பட்டயத்தில், பிஷ்ணாய்களின் கிராமங்களில் இனி எந்த ஒரு மரமோ அல்லது பிராணியோ வெட்டப்பட மாட்டாது என்று எழுதிக்கொடுத்தார். இச்சம்பவம் நடந்த கிராமத்திற்கு’கெஜாரி’ (வன்னி எனப் பொருள்படும்) என்ற பெயரும் ஏற்பட்டது. தமிழகத்தில் வன்னிமரத்தடியில் பிள்ளையாரை பிரதிஷ்டை செய்து வழிபடுவதுண்டு.