அண்டங் காக்கை

 

அண்டங் காக்கை

ENGLISH NAME சங்க கால பெயர் தற்போதைய பெயர் 
JUNGLE CROW வாய்வன் காக்கை அண்டங் காக்கை

 

 

JUNGLE CROW

CORRUS MACRORHYANACHOS

நமது ஊர் காக்கையிலிருந்து சற்று வேறுபட்டு காணப்படும். கழுத்து பகுதி நல்ல கருப்பு நிறமாக இருக்கும். வாய்ப்பகுதி (அலகு) சற்று பெரியதாக இருக்கும்.சங்க காலத்தில் பருந்துகள், கழுகுகள், கோட்டான்களோடு இணைந்து ஊர்ப்புறங்களுக்கு வெளியே இது திரிந்து கொண்டிருந்தது என்பதை

கவிசெந் தாழிக் குவிபுறத் திருந்த

செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா

வாய்வன்  காக்கையுங் கூகையுங் கூடிப்

பேஏ யாயமொடு பெட்டாங்கு வழங்கும்

காடுமுன் னினனே….

என்ற புறநானுறு 238 இல் உள்ளது . இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது அண்டங் காக்கை என்பதனை அதன் அலகு பற்றிய ‘வாய்வன்’ என்ற அடைமொழி தெரிவிக்கின்றது. இறந்தவர்களுக்கு படைக்கப்படும் உணவை இதுவும் ஊர்க்காக்கைகளுடன் கூடி உண்பதையும் ஆங்காங்கே காணலாம், என்பதை பொருநராற்றுப் படை

செஞ்சோற்ற பலிமாந்திய

கருங்காக்கை கவவுமுனையின்

மனைநொச்சி நிழலாங்கண்

ஈற்றியாமைதன் பார்ப்போம்பவும்                            (183-186)

எனக் குறிப்பிடுகின்றது. இவ்வாறு காக்கைக்குச் சோறிடுபவர்கள் பலியிடப்பட்ட கோழி, ஆடு ஆகியவற்றின் இரத்ததையும் சோற்றுடன் கூட்டிப் படைக்கும் பழக்கம் இருப்பதாலேயே ‘செஞ்சோறு’ என்பதற்கு நச்சினார்க்கினியர் தன் உரையில் ‘உதிரத்தாற் சிவந்த சோற்றையுடையவாகிய பலியை விழுங்கின கருங்காக்கை ‘ என விளக்கம் தந்துள்ளார்.

Picture1 Picture2

பருத்த அலகு அதன் கருப்பு நிறத்ததான தோற்றத்துடன் இயைந்து இருப்பது புலவர்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளதால் பல்வேறு அடைமொழிகள் தந்துள்ளனர். அவை

கருங்கட் காக்கை                         பதிற்றுப்பத்து 30

கொடுங்கண் காக்கை                  நற்றிணை 397

பசுங்கண் காக்கை                         நற்றிணை 258

வாய்வன் காக்கை                         புறம் 362

மணிவாய்க் காக்கை                    அகம் 319

மணிக்கட் காக்கை                        அகம் 327

 

கூகைகளுடன் நட்பும் பாராட்டி இணைந்து திரிவது என்பதைப்  புறநானுறு 392இன்

வாய்வன் காக்கை   கூகையொடு கூடிப்

பகலுங் கூவு மகலு  ளாங்கண்

என்ற வரிகள் மூலம் அறியலாம்.