முள்ளு வேங்கை (Asna)

English Name Tamil Name Botanical Name
Asna முள்ளு வேங்கை Bridelia Vetrusa Spreng

பொது விவரம்

மேற்குத் தொடர்ச்சி மலை காடுகளின் பள்ளத்தாக்குப் பகுதிகளிலும், ஓடைக்  கரைகளிலும் உள்ளன. முள்ளு வேங்கை சுமாரான உயரமுடைய மரம். 10 மீட்டர் உயரம் செங்குத்தாக வளர்ந்து 1.80- 2.10 மீட்டர் சுற்றளவுள்ள உருளை வடிவ அடிமரத்தைக் கொண்டிருக்கும். சிறு மரங்கள் மற்றும் கிளைகளில் முட்கள் இருக்கும். மரப்பட்டை கருப்பு நிறமுடையது.

முள்ளு வேங்கை  இலையுதிர்க்கும் மரமாகும். கோடையில் இலைஉதிர்த்து, மழை பெய்தவுடன் பழுப்புச் செம்மை நிறத் துளிர்களை உருவாக்கி, பார்ப்பதற்கு மிகவும் அழகாகக் காட்சியளிக்கும். இளம் கிளைகளும் இலைகளின் பின் புறமும் நுண்ணிய பொடி தூவியது போன்றிருக்கும்.

2

மே-ஜூலை மாதங்களில் பூக்கும். ஒருபால் பூக்களும், இரு பால் பூக்களும் கலந்திருக்கும். இப்பூக்கள் மஞ்சள் நிறமுடையவை.

சிறிய உருண்டையான காய்கள் உருவாகிக் கனியும். 0.75 செ.மீ நீளமுள்ள இக்கனிகள் நீலக் கருமை நிறமுடையவை. அதிலுள்ள சதைக் குழம்பில் பல விதைகள் இருக்கும். கனியை உண்ணலாம், சிறிது இனிப்புடையது, பறவைகள், குறிப்பாகப் பச்சைப் புறாக்கள் கனிகளை உண்டு, விதைகளை சிதறிவிடும்.

மரம்

கடைசல் வேலைகளுக்கும் உகந்தது. இதனைக் காசமரம் எனக் கூறுவர். கட்டிட வேலைகளுக்கான சாமான்கள்,  வண்டிச் சாமான்கள், பலகைகள்,  செய்திட ஏற்ற மரம். இதனை தேக்கிற்கு அடுத்தபடியான இரண்டாம் தர மரம் எனக் கூறுவர். சிற்பமும் செதுக்கலாம். நீரில் மூழ்கிய நிலையில் வலு அதிகரிப்பதால், கிணற்று வேலைகளுக்கும் மிக ஏற்றது.

3

பயிர் முறை

முள்ளு வேங்கையை  மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் நட ஏற்றது. சமவெளிகளில் ஆண்டிற்கு 1000 மில்லியளவு மழை கிடைக்கும் இடங்களிலும் நடலாம். நகரங்களிலும் நடலாம் . பெரிய கட்டிடவளாகங்களில் மூலைப் பகுதிகளில் நட்டு வளர்த்தால், இலையுதிர்த்த பின் துளிர்க்கும் சமயம் அழகு மரமாகக் காட்சியளிக்கும்.

முள்ளு வேங்கையைப் பயிரிடஇ விதையை நாற்றுவிட்டு கன்றுகளை நட வேண்டும். இதற்கு பழுத்த கனிகளைச் சேகரித்துஇ நீரிலேயே பிசைந்து, கழுவி, விதையைத் தனித்தெடுத்து, உலர்த்தி வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கிலோ எடையில் 10,000- 17,000 விதைகள் இருக்கும். நாட்பட வைத்திருக்க இயலாது. முளைப்புத் திறன் குறைந்துவிடும். எனவே விதை எடுத்ததும்  நற்று விட வேண்டும். நாற்றுக்கள் 50 செ.மீ வளர்ச்சி பெற்றதும் 3 மீட்டர் இடைவெளியில் நடலாம். நிதானமாக வளரும் இயல்பு உடையது.