Greater Coucal செம்போத்து
அழகுத் தமிழில் செம்போத்து, செம்பகம் என பல்வேறு வழக்கு பெயர்களால் அழைக்கப்படும் இப்புல்லினம் அவ்வளவு அழகொன்றும் கிடையாது. ஆனால் நமது கொள்ளைப் புறங்களில், வயல்வெளிகளில், புதர் காடுகள் பக்கம் தத்தித் திரியும் இவை பார்ப்பதற்கு சற்று கம்பீரமான தோற்றம் கொண்ட பறவை. அதன் சிவந்த கண்களையும் கருமை மற்றும் கருநீல நிறம் கொண்ட உடலமைப்பையும் அதன் சிவந்த முதுகு மற்றும் இறக்கையையும் பார்க்கும் யாவரும் சட்டென இந்த செங்காக்கையை அடையாளம் கண்டுகொள்வர். அவை மனிதனோடு சற்று நெருங்கி வாழக்கூடிய புல்லினமாதலால் இப்பறவையும் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது.
சங்க இலக்கியம்
சங்க இலக்கிய புலவர் பெருந்தகைகள் இப்பறவையை பொருத்தமாக உவமைப்படுத்தியுள்ளனர். அவை பின்வருமாறு.
கருந்தாள் மிடற்ற செம்பூழ்ச் சேவல் சிறுபுன் பெடையொடு
குடையும் ஆங்கண் – அகநானூறு 63-7
(செம்பூழ்ப் பறவையின் கழுத்து கருத்திருக்கும். இவை தன் பெண் பறவையோடு சேர்ந்து புழுதியை கிளறிக்கொண்டிருக்கும் கொடிய பாலை நில வழி கடுமையான வறட்சி உடையது என பொருள்பட விளம்புகிறது.)
இங்கு செம்போத்து – செம்பூழ்ப் பறவை என சங்க நூல்களில் குறிப்பிடப்படுகிறது. இங்கே போத்து என்பது ஓர் ஆண்பாற் பெயர் ஆகும். இவற்றின் கம்பீரமான தோற்றத்தினால் போத்து எனும் விகுதிகொண்ட பெயரால் அழைக்கப்ட்டிருக்கலாம். இவற்றின் தோற்றம் ஆண்பால் பெண்பால் வேறுபாடு அற்று ஒத்த நிறமுடையதாக காணப்படும். மேலும்
பைந்திணை உணங்கல் செம்பூழ் கவரும் வன்புல நாடன் – ஐங்குநுறூறு 469
(முல்லை நில மக்கள் காய வைத்திருக்கும் தினையைச் செம்பூழ்ப் பறவைகள் மேயுமாம் என பொருள் விளம்புகிறது இவ்வடிகள்)
இப்பறவையினம் அனைத்து வகையான நிலப்பகுதிகளிலும் காணப்படக்கூடிய பறவையினம் என்பது தெளிவாகிறது. இவை குயில் வகையை சார்ந்தது என்றாலும் கூடுகட்டி குஞ்சு பொறிக்கும் பழக்கமுடையது. குஞ்சுகள் கருமை நிறத்தில் வெண்மை நிற கோடுகள் கொண்டதாய் காணப்படும்.
சிறப்பு
தமிழர் நாகரீகத்தின் சங்ககாலப் பறவையினங்களில் ஒன்றான இப்பறவை, தமிழினத்தின் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் தமிழீழத்தின் தேசியப்பறவையாக அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.