Indian Jungle Crow
அண்டங்காக்கை
சங்க இலக்கியத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட அளவில் பறவைகள் தொடர்பான குறிப்புகள் இருந்தாலும் குறிப்பிட்ட சில பறவைகள் பற்றியதாகவே அவை அமைந்துள்ளன. அன்று புலவர் பெருந்தகையோர் அவர்தம் கண்ணுற்ற பறவைகள் எல்லாம் சங்க இலக்கியத்தில் இடம்பெறவில்லை. ஒப்புமைக்கும் உவமைக்கும் இலக்காக, அழகிலும் வண்ணத்திலும் சிறந்த பறவைகளே புலவர்களின் கருத்தை கவர்ந்துள்ளன என நாம் பொருள் கொள்ள எத்தனிக்கும் வேளையில்
ஊரின் ஒதுக்குப் புறங்களிலும் காடு சார்ந்த இடங்களிலும் வாழும் பாறுகளோடும், கழுகுகளோடும் இறந்தனவற்றை உண்டு வாழ கூடிய, கர்ண கொடூரமாய் கரைந்திடும், கருங்காக்கை, அண்டங்காக்கை மற்றும் பிணந்தின்னி காகம் என பல்வேறு வழக்கு பெயரில் அழைக்கப்படும் காகத்தை நாம் அனைவரும் அறிவோம்.
இப்பறவை பற்றிய குறிப்பு சங்க இலக்கிய பாடல்களில் பல்வேறு இடங்களில் இடம் பெற்றுள்ளன உதாரணமாக
கவிசெந் தாழிக் குவிபுறத் திருந்த
செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா
வாய்வன் காக்கையுங் கூகையுங் கூடிப்
பேஏ யாயமொடு பெட்டாங்கு வழங்கும்
காடுமுன் னினனே
என்ற புறம் 238 இல் கூறப்பட்டுள்ளது. இதில் அண்டங்காக்கை பற்றி அதன் பெரிய அலகுதனை குறிக்கும் வகையில் வாய்வன் காக்கையும் என விளம்பப்படுகிறது.
சுடுகாட்டில் கழுகு போன்ற பிணங்களைத் திண்ணக்கூடிய பறவைகளுடன் காணப்படும் இவை கடுவினை மறவரின் அம்புகளால் செத்து விழுந்த மனிதர்களின் பிணங்களைத் தின்னும் பழக்கம் கொண்டது என அகம் 319 முதல் ஐந்து வரிகள் தெரிவிக்கின்றன.மேலும்
அவிர்தொடி கொட்பக் கழுகுபுக வயரக்
கருங்கட் காக்கையொடு கழுகுவிசும் பகவச்
சிறுகண் யானை யாள்வீழ்த்துத் திரிதரும்
நீளிடை அருஞ்சுர மென்பநம்
தோளிடை முனிநர் சென்ற வாறே
என்ற ஐங்குறுநூற்றின் 314 ஆம் பாடல் வாயிலா, இது கழுகுகள், பாறுகளுடன் பாலைநிலத்தில் சேர்ந்து திரியும் இயல்புடையதாய் இருந்தது என்பதனை விளக்குகின்றது.
தற்காலத்தில் அண்டங் காக்கைகள் குப்பை கூலங்களில் ஊர் காக்கைகளுடன் கூடி உணவு தேடுவதை காணலாம், இதேபோன்று
செஞ்சோற்ற பலிமாந்திய
கருங்காக்கை கவவுமுனையின்
மனைநொச்சி நிழலாங்கண்
ஈற்றியாமைதன் பார்ப்போம்பவும்
என பெருநராற்றுப்படை சங்க இலக்கியப் பாடல் குறிப்பிடுகிறது. இதன் பொருள் இக்காக்கை இறந்தவர்களுக்கு படையல் இடப்படும் உணவை குருதி கலந்தன் பொருட்டு சிவந்த செஞ்சோறு எனப்படும் உணவை, இவைகள் ஊர் காக்கைகளுடன் கூடி உண்ணும் என்பதை ஆங்காங்கே காணலாம் என இதன் பழக்கத்தை அன்று சங்க இலக்கியப் பாடல் தெளிவுபடுத்துகிறது.
அன்று படையல் இடப்படும் உணவு பலியிடப்பட்ட கோழி ஆடு ஆகியவற்றின் ரத்தத்துடன் சேர்த்து படைக்கப்பட்ட உணவு செஞ்சோறு என்பதற்கு நச்சினார்க்கினியர் அவரது உரையில் உதிரத்தாற் சிவந்த சோற்றுடையவாகிய பலியை விழுங்கின கருங்காக்கை என விளக்கம் தந்துள்ளார்.
இனிமையான குரலும் அழகான வண்ணமும் கொண்ட பறவைகள் புலவர்களை எவ்வாறு கவர்ந்தனவோ அதுபோன்று காக்கையும் தனது பருத்த அலகு மற்றும் அதன் கருப்புநிற தோற்றத்துடன் இணைந்து இருப்பதே புலவர்களை கவர்ந்துள்ளது போலும்! பல்வேறு சங்க இலக்கிய பாடல்களில் இக்காக்கை இடம்பெற்றுள்ளது. அவை பின்ருவமாறு
கருங்கட் காக்கை பதிற்றுப்பத்து 30
கொடுங்கண் காக்கை நற்றினை 397
பசுங்கண் காக்கை நற்றிணை 258
வாய்வன் காக்கை புறம் 362
மணிவாய்க் காக்கை அகம் 319
மணிக்கட் காக்கை அகம் 327
போன்ற பல்வேறு இடங்களில் காக்கை வருணிக்கப்பட்டுள்ளது.
பகல்வெல்லும் கூகையைக் காக்கை என திருக்குறள் கூறுகிறது. இதன் பொருள் பகல் வேளையில் வெளிப்படும் கூகை எனும் ஆந்தையினை ஊர் புறங்களில் காக்கை (Common Crow) விரட்டியடிக்கும். ஆனால் இந்த அண்டங் காக்கைகள் ஊர்காக்கைகளிலிருந்து வேறுபட்ட பழக்கத்தை கொண்டுள்ளது. இவை கூகைகளுடன் இணக்கமாக இணைந்து திரிந்தன என்பதை
வாய்வன் காக்கை கூகையொடு கூடிப்
பகலுங் கூவு மகலு ளாங்கண்
என்ற புறம் 392 இன் வரிகள் தெரிவிக்கின்றன
பொதுவாக ஊர்ப்புற காக்கைகள் மனிதர்களோடு நெருங்கி பழகினாலும் அவை எப்போதும் எச்சரிக்கையுடனும் பயந்த சுபாவம் கொண்டவை. ஆனால் அண்டங் காக்கைகள் மிகவும் துணிவு கொண்டவை. இவைகள் பொதுவாக மற்ற பறவைகளை கண்டும், பல வேளைகளில் மனிதர்களைக் கண்டும் கூட அஞ்சுவது இல்லை. மனிதர்கள் மிக நெருங்கிச் சென்ற பின்னரே இவை எச்சரிக்கையுடன் பறக்கும் தன்மை கொண்டவை என்பது சற்று கவனிக்க கூடியது. அதனால்தான் என்னவோ இவைகள் சங்கப் புலவர்களின் கருத்தையும் கவர்ந்து உள்ளன என்பதில் வியப்பேதும் இல்லை.