மருதமரம்(Arjun )
English Name | Tamil Name | Botanical Name |
Arjun | மருதமரம் | Terminalia Arjuna |
ஓங்கி உயர்ந்து வளரக்கூடியது, மருதமரம்.கடுங்களர் நிலங்களிலும் வளரும். தமிழ்நாட்டில் பல மருது இனங்கள் இருப்பதால், இதனை வெள்ளை மருது அல்லது வெண்மருது என்பர். தமிழ்நாட்டில் கடற்கரையிலிருந்து 1000-1400 மீட்டர் உயரப் பகுதி வரையில், ஆற்றோர மரமாக வளருகிறது. சாதாரணமாக ஏழு மீட்டர் சுற்றளவுடன் 30 மீட்டர் உயரம் வளரக் கூடியது. நல்ல சூழ்நிலையில் 10 மீட்டர் சுற்றளவுடன் 60 மீட்டர் உயரத்தையும் எட்டிடும். மழைக்காலம் முடிந்ததும் இலைகள் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறமடைந்து உதிரும்.
ஏப்ரல்-ஜூலை மாதங்களில், இலைச் சந்துகளிலிருந்து, (நுனிப்பகுதியில்) 10 செ.மீ நீளமுள்ள பூங்கதிர்களில் சிறு பூக்கள் உருவாகும். நான்கு மில்லிமீட்டர் அளவேயுள்ள இப்பூக்கள் நன்கு தெரியாது. ஜூன் மாதத்திற்கு மேல் நெற்றுக்கள் உருவாகத் துவங்கும். ஐந்து இறக்கைகளுடைய, ஐங்கோண நெற்றுக்கள் 4.5-6.0 x 2-3 செ.மீ அளவுடன் மரத்திலேயே நீண்ட நாட்கள் நிலத்து, சிறுகச் சிறுக உதிர்ந்து கொண்டிருக்கும். மரத்தினடியில் வேர்ச் செடிகளும் உருவாகும்.
மரம்
முன் காலத்தில் கோவில் தேர்கள் செய்ய, மருத மரத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.
பயன்கள்
களர் நிலங்களில் மருதமரத்தை வளர்த்தால், களரின் கடுமை குறைந்துவிடும். முன் காலத்தில் காடுகளில் மருதமர வளர்ச்சியைக் கொண்டு, நீர் ஊற்று இருப்பதை கண்டறிந்தனர். ஓங்கி வளர்ந்த மருதமரத்தின் அருகே, ஆழத்தில் நீரூற்று இருக்கும் என நம்பப்படுகிறது.
பயிர் முறை
மருத மரம் நீர்ச் செழிப்புள்ள பகுதிகளில் வளரும் மரமாகும். எனவே மருத மரத்தை, கால்வாய்க் கரைகள், ஆற்றோரங்கள், கண்மாய் கரைகள் எனப் பார்த்து நடவேண்டும். நீர் கிடைத்தால், அழல் நிலத்திலும் கூட வளர்ந்து மண்ணை வளப்படுத்திடும்.நிறைய கிளைகள் இருப்பதால் தூசிக்காற்றிலுள்ள தூசியையும் வடிகட்டிக் கொடுத்திடும்.தொழிற்சாலை வளாகங்களிலும், நீர்பாய்ச்சி ஓங்கி உயரமாக வளரச் செய்து, புகை வடிகட்டியாகவும் பயன்படுத்தலாம். மருதமரத்தைப் பயிரிட, நேரடியாக விதைக்கலாம். நாற்று விட்டு, கன்றுகளை நடலாம்.
நாற்றுக்குச்சிகள் தயாரித்து நடலாம்.கிளைக்குச்சிகளை வெட்டி, செடிவளர்க்கும் குளிர் அறைகளில் (mist chamber) துளிர்விடச் செய்து நடலாம். நட்ட கன்றுகளுக்கு அடிக்கடி கொத்திக் கொடுத்து, கோடையில் நீர் பாய்ச்சினால், துரிதமாக வளரும்.செடிகள் சாய்ந்து வளரும். ஒரு கழியை ஊன்றி நேராக வளரச் செய்ய வேண்டும், மற்றும் கிடைமட்டத்தில் வளரும் கிளைகளை வெட்டி, செங்குத்தாக வளரச் செய்ய வேண்டும்.