செவ்விலவு(RED SILK COTTON TREE)
ENGLISH NAME : RED SILK COTTON TREE
SCIENTIFIC NAME ; Bombax Ceiba.D.Syn: Salamalia Malabarica)
பம்பாக்ஸ் என்ற முதற்பெயர் கிரேக்க மொழிச் சொல்லிலிருந்து ஏற்பட்டது. சில்க் போன்ற பஞ்சின் தன்மையை இச்சொல் குறிக்கிறது.
பொது விவரம்
செவ்விலவு, நம் நாடெங்கும் காணப்படும் மரம். இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 800 மீட்டர் உயரம் வரை, சமவெளி, புல் தரைகள் மற்றும் குன்றுகளிலும் வளருகிறது. இலையுதிர்க் காடுகளிலும் காணப்படுகிறது. இங்கெல்லாம் பிரமாண்டமான மரமாக வளர்ந்திடும்.
மார்ச்- ஏப்ரலில் பூக்கும். இப்பூக்கள் குங்குமச் சிவப்பு நிறத்தில் பெரிய பூக்களாக கிளைகளின் நுனிகளில் உருவாகும். பச்சை நிற புற இதழ் மூடிய மொட்டுக்கள் தோன்றியவுடன் பறவைகள் வந்துவிடும்.காடுகளில், பல்வேறு வண்ணப் பறவைகள், செந்நிறச் செவ்விலவுப் பூக்களின் நடுவே அமர்ந்து துள்ளிப் பறக்கும் காட்சி மிகவும் அழகானது. உலர்ந்த உதிரும் பூக்களை நாடி, காடுகளில் மான்களும் வந்துவிடும். ஏப்ரல் மாதத்திற்கு மேல் காய்கள் உருவாகும். தமிழ்நாட்டில் மார்ச் மாதத்தில் தேனீக்களும் செவ்விலவுப் பூக்களை தேடி வரும்.
பஞ்சு
நாட்டு இலவைப் போன்றே, செவ்விலவு நெற்றுக்களிலும் பஞ்சு இருக்கும்.
பயிர் முறை
இதனை மூன்று வழிகளில் வளர்க்கலாம். நேரடியாக விதைக்கலாம். நாற்று விட்டு கன்றுகளை நடலாம்.நாற்றுக்குச்சிகளையும் நடலாம். நட்ட 5-6 வருடங்களில் பலன் கொடுக்கத் துவங்கும். தமிழகத்தில் எங்கும் பயிரிடத் தகுந்த மரமாகும். இம்மரம் கிராமத்திலும், சாலை ஓரங்களிலும் பயிரிட ஏற்றது. நகரங்களிலும் பெரிய சாலைகளிலும் மற்றும் பெரிய கட்டிட வளாகங்களிலும் நட்டு காற்றை சுத்தப்படுத்தலாம்.